Tamilவிளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து கரோலினா மரின் விலகல்

26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நாளை முதல் 19-ந்தேதி வரை வரை ஸ்பெயினின் வெல்வா நகரில் நடக்கிறது. விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), ஸ்ரீகாந்த் (இந்தியா), சோவ் டைன் சென் (சீனதைபே), பி.வி.சிந்து (இந்தியா), அன்செயோங் ( தென்கொரியா), ராட்சனோக் இன்டானோன் (தாய்லாந்து) உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த போட்டியில் இருந்து முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனும், 3 முறை உலக சாம்பியனுமான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் விலகுவதாக நேற்று அறிவித்தார்.

இந்த ஆண்டில் விளையாடிய 5 தொடர்களில் 4-ல் மகுடம் சூடிய அவர் பயிற்சியின் போது இடது கால்முட்டியில் காயமடைந்தார். அதில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்ட 28 வயதான கரோலினா மரின் சொந்த மண்ணில் நடக்க உள்ள உலக சாம்பியன்ஷிப்பில் களம் திரும்ப திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு முழு உடல்தகுதியை எட்டாததால் இந்த போட்டியில் இருந்து பின்வாங்கியிருக்கிறார். ‘காயத்தில் இருந்து 100 சதவீதம் குணமடையாத வரை களம் திரும்பமாட்டேன். அனேகமாக பிப்ரவரி அல்லது மார்ச்சில் மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது’ என்றார்.