உலக பெண்கள் குத்துச்சண்டை – அரையிறுதியில் மேரிகோம் தோல்வி
11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவு போட்டிகளில் 6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் மேரி கோம், தாய்லாந்து மற்றும் கொலம்பிய வீராங்கனைகளை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை புசெனாஸை எதிர்கொண்டார் மேரி கோம். பரபரப்பான ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில், மேரி கோம் போராடி தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் மேரி கோம் இதுவரை 6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என எட்டு பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
அரையிறுதியில் வெற்றி பெற்ற துருக்கி வீராங்கனை புசெனாஸ், நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ரஷ்யா வீராங்கனை லிலியாவை எதிர்கொள்கிறார்.