உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்தது. இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் சரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், மாரியப்பன் 1.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதன் மூலம் இருவரும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர். அமெரிக்க வீரர் சாம் கிரிவ் 1.86 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.]
பீகாரை சேர்ந்த சரத்குமார் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் 2016-ம் ஆண்டு ரியோடிஜெனீரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் லால் வினாய் குமார் வெண்கலப்பதக்கம் வென்று அடுத்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி அடைந்தார்.
வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத்குமார் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டியில் எனது செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக நான் உக்ரைனில் தங்கி இருந்து கடுமையான சீதோஷ்ண நிலைக்கு மத்தியில் பயிற்சி மேற்கொண்டேன். நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். எனது பயிற்சி அட்டவணை மற்றும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாக கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
வெண்கலப்பதக்கம் பெற்ற தமிழக வீரர் மாரிமுத்து கருத்து தெரிவிக்கையில், ‘எனது உடல் சரியாக ஒத்துழைக்கவில்லை. எனது சிறந்த திறனை வெளிப்படுத்த முடியவில்லை. மாலையில் சீதோஷ்ண நிலை குளிராக இருந்தது. அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.