Tamilசெய்திகள்

உலக நாடுகளுக்காக இந்தியாவில் இருந்து மேலும் பல தடுப்பூசிகள் வரும் – பிரதமர் மோடி உறுதி

ஆட்கொல்லி கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு உலக நாடுகளைப்போன்று இந்தியாவும் தீவிரமாக தடுப்பூசி ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக 2 தடுப்பூசிகளை தயாரித்து பயன்பாட்டுக்கும் அளித்திருக்கிறது.

உள்நாட்டு தயாரிப்பான கோவேக்சின், ஆக்ஸ்போர்டு தயாரிப்பான கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை இந்தியா தயாரித்து உள்நாட்டு மக்களுக்கும், வெளிநாட்டு மக்களுக்கும் அளித்து வருகிறது.

இத்துடன் நில்லாமல் மேலும் பல தடுப்பூசிகளை இந்தியாவில் உருவாக்க இந்திய மருத்துவ உலகம் பாடுபட்டு வருகிறது. இதன்மூலம் விரைவில் பல தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து கிடைக்கும் என பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு உறுதியளித்துள்ளார்.

உலக பொருளாதார மன்றத்தின் தவோஸ் செயல்திட்ட உச்சிமாநாட்டில் காணொலி காட்சி மூலம் நேற்று சிறப்பு உரையாற்றினார். அப்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கொரோனாவால் இந்தியா மிகவும் மோசமாக பாதிக்கப்படும் எனவும் கொரோனா சுனாமியை இந்தியா எதிர்கொள்ளும் எனவும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிலர் கூறினர்.

அது மட்டுமின்றி இந்தியாவில் 70 முதல் 80 கோடி பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாவார்கள், அதில் 20 லட்சம் பேர் வரை மரணமடைவார்கள் எனவும் பலரும் அச்சுறுத்தினர். ஆனால் அந்த வார்த்தைகளை மெய்யாக்க இந்தியா விடவில்லை. கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் இயக்கத்தை நாங்கள் உருவாக்கினோம். சிறப்பு கொரோனா சுகாதார கட்டமைப்புகளை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். இந்த தொற்றுக்கு எதிராக போராட எங்கள் மனித வளத்துக்கு நாங்கள் பயிற்சி அளித்தோம். பரிசோதனை மற்றும் கண்டறிவதில் முழு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம்.

இதன்மூலம் உலக அளவில் அதிக உயிரை காத்து வெற்றி பெற்றிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா தொடங்கி இருக்கிறது. 12 நாட்களில் மட்டும் 23 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. இந்த வேகமே திட்டத்தின் வீரியத்தை எடுத்துரைக்கும்.

150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை அனுப்புவதன் மூலம் இந்தியா தனது உலகளாவிய பொறுப்பை நிறைவேற்றுவதை உறுதி செய்திருக்கிறது. அதேநேரம் கொரோனா தடுப்பூசிகளையும் பிற நாடுகளுக்கு அனுப்பி வருகிறது.

இந்தியா ஏற்கனவே 2 தடுப்பூசிகளை உலகுக்கு அறிமுகம் செய்திருக்கும் நிலையில், மேலும் பல தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு கிடைக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

கொரோனாவுக்கு பிந்தைய உலக வர்த்தக சமூகம் வேகமாக மாறி வருவதாக இந்த கூட்டத்தில் கூறிய பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் பங்கேற்க வருமாறு உலக வர்த்தகர்களுக்கு அழைப்பும் விடுத்தார்.