இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டதாகும்.
இந்நிலையில், ஐதராபாத் டெஸ்டில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வியால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற சமன் செய்தபோது இந்திய அணி 54.16 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருந்தது. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு புள்ளிகள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் இருந்தது.
ஐதராபாத் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியால் உலக சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு பின்தங்கியது. 2-வது இடத்தில் இருந்து 3 இடங்கள் பின்தங்கி சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய அணி 54.16 புள்ளியில் இருந்து 43.33 புள்ளிகளாகக் குறைந்து இருக்கிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோற்றாலும் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 55.00 சதவீத புள்ளிகள் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும், வங்காளதேசம் 4-வது இடத்திலும் உள்ளன. இந்த 3 அணிகளும் தலா 50 சதவீத புள்ளிகளுடன் உள்ளன.
பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் முறையே 6 முதல் 9-வது இடங்களில் உள்ளன.