தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை உள்ளடக்கியதாகும். இந்த வெற்றி மூலம் பெற்ற 40 புள்ளிகளுடன் சேர்த்து இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
4 டெஸ்டில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று 200 புள்ளிகள் பெற்று உள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 டெஸ்டில் பெற்ற வெற்றியால் 120 புள்ளி கிடைத்தது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பெற்ற வெற்றியால் 40 புள்ளி பெற்றது. தற்போது 40 புள்ளிகள் கிடைத்துள்ளதால் இந்திய அணி புதிய உச்சத்தில் உள்ளது.
நியூசிலாந்து, இலங்கையை விட இந்திய அணி 140 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
நியூசிலாந்து, இலங்கை அணிகள் தலா 60 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. இரு அணிகளும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளன.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 56 புள்ளிகளுடன் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை புள்ளிகள் எதுவும் பெறவில்லை. அவைகள் 2 டெஸ்டில் விளையாடி இரண்டிலும் தோற்றன.
வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் இன்னும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவில்லை.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இந்தியா புதிய சாதனை படைத்தது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 2013 ஆண்டு பிப்ரவரி முதல் 2019 அக்டோபர் வரை இந்திய மண்ணில் நடந்த அனைத்து டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.
இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி உள்நாட்டில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடரை வென்றதே சாதனையாக இருந்தது. இதை இந்தியா முறியடித்து புதிய உலக சாதனை படைத்தது.
ஆஸ்திரேலியா அணி 2 முறை (1994- 2001, 2004-2008) சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது.