ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினம் உடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் ஆர்சிபி குஜராத் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ன நிலையில் ஆர்சிபி களம் இறங்கி முதலில் 197 ரன்கள் எடுத்தது. இருந்தாலும் சுப்மான் கில் சூப்பராக விளையாடி சதம் அடிக்க குஜராத் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றபெற்றது. இதனால் ஆர்சிபி பிளே ஆப் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் வீரர்கள் மிகவும் சோகம் அடைந்தனர். குறிப்பாக முகமது சிராஜ் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். விராட் கோலி மிகவும் சோகமாக காணப்பட்டார்.
இந்நிலையில், ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாத சோகம் அடங்குவதற்குள் விராட் கோலி இன்று காலை இங்கிலாந்து புறப்பட்டார். இங்கிலாந்தில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்ட பலர் இன்று அதிகாலை 4:30 மணிக்கு இங்கிலாந்து புறப்பட்டனர்.
ஏற்கனவே புஜாரா இங்கிலாந்தில் கவுண்டி போட்டியில் விளையாடி வருவதால் அவர் அணியுடன் இணைவார். ரோகித் சர்மா, சுப்மான் கில் உள்ளிட்ட பலர் பிளே ஆப் சுற்றில் விளையாடிய பின் அடுத்தகட்டமாக இங்கிலாந்து புறப்பட்டுச் செல்வார்கள். மொத்தமாக மூன்று முறையாக இங்கிலாந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.