X

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்திய அணியில் கே.எல்.ராகுலை சேர்க்க வலியுறுத்தும் கவாஸ்கர்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லோகேஷ் ராகுலை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யலாம் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக விளையாட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். அவர் 5 அல்லது 6-வது வரிசையில் களம் இறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும்.

ஏனென்றால் ராகுல் கடந்த ஆண்டு இங்கிலாந்து மைதானங்களில் சிறப்பாக பேட்டிங் செய்தார். லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியை தேர்ந்து எடுக்கும் போது லோகேஷ் ராகுலை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப்பண்ட் விபத்தில் காயம் அடைந்தார். இதனால் அவர் இந்த ஆண்டு முழுவதும் எந்தவித போட்டியிலும் விளையாடமாட்டார். பண்ட் இடத்துக்கு கே.எஸ்.பரத் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அவரது பேட்டிங் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதனால் தான் அவர் இடத்தில் ராகுலை சேர்க்கலாம் என்று கவாஸ்கர் வலியுறுத்தி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்டில் தொடக்க வீரராக ஆடிய ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3-வது மற்றும் 4-வது டெஸ்டில் அவர் நீக்கப்பட்டார். அதோடு லோகேஷ் ராகுலின் துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. அவரது இடத்தில் இடம் பெற்ற சுப்மன்கில் தொடக்க வரிசையில் சதம் அடித்து முத்திரை பதித்தார்.

தொடக்க வீரர் வரிசையில் சுப்மன்கில் நல்ல நிலையில் இருப்பதால் ராகுலை விக்கெட் கீப்பராக சேர்த்து 6-வது வீரராக களம் இறக்கலாம் என்ற யோசனையை கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.