X

உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசை – முதலிடத்தில் ஜோகோவிச்

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (9,720 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

32 வயதான ஜோகோவிச் 5-வது முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் நம்பர் ஒன் இடத்தை 276-வது வாரமாக அலங்கரிக்கிறார். இதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை அதிக வாரங்கள் வகித்த வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த வகையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (310 வாரங்கள்) முதலிடத்திலும், அமெரிக்க முன்னாள் வீரர் பீட் சாம்பிராஸ் (286 வாரங்கள்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கால்இறுதியில் டொமினிக் திம்மிடம் தோல்வி கண்ட ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,395 புள்ளிகள்) முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அரைஇறுதியில் தோல்வி கண்ட சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (7,130 புள்ளிகள்) 3-வது இடத்தில் நீடிக்கிறார். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் (7,045 புள்ளிகள்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளார். 4-வது சுற்றில் தோல்வி கண்ட ர‌ஷிய வீரர் டேனில் மெட்விடேவ் (5,960 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தை பெற்றுள்ளார்.

கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் (4,745 புள்ளிகள்) 6-வது இடத்திலும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (3,885 புள்ளிகள்) 7-வது இடத்திலும், இத்தாலி வீரர் மாட்டோ பெர்ரெட்டினி (2,905 புள்ளிகள்) 8-வது இடத்திலும் தொடருகின்றனர். பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் (2,700 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தையும், பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் (2,555 புள்ளிகள்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் பிரஜ்னே‌‌ஷ் குணேஸ்வரன் ஒரு இடம் முன்னேறி 122-வது இடத்தையும், சுமித் நாகல் 6 இடம் உயர்ந்து 125-வது இடத்தையும், ராம்குமார் 2 இடம் முன்னேறி 182-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 2 இடம் சறுக்கி 40-வது இடத்தை பிடித்துள்ளார். திவிஜ் சரண் 53-வது இடத்திலும், புரவ் ராஜா 91-வது இடத்திலும் தொடருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலிய ஓபன் அரைஇறுதியில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய வீராங்கனை ஆ‌‌ஷ்லி பார்ட்டி (8,367 புள்ளிகள்) நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். அரைஇறுதியில் தோற்ற ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (6,101 புள்ளிகள்) 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 3-வது சுற்றில் தோல்வி கண்ட செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (5,290 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்தை பெற்றுள்ளார். உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (4,775 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தையும், சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச் (4,675 புள்ளிகள்) 2 இடம் முன்னேறி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர். கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு (4,665 புள்ளிகள்) 6-வது இடத்தில் நீடிக்கிறார்.

ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை உச்சி முகர்ந்த அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் (4,495 புள்ளிகள்) 8 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார். நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் (3,965 புள்ளிகள்) 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்து இருக்கிறார். அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (3,915 புள்ளிகள்) 9-வது இடத்தில் நீடிக்கிறார். முன்னாள் சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (3,626 புள்ளிகள்) 6 இடம் சறுக்கி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Tags: sports news