உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு – முதல் முறையாக முதலிடம் பிடித்த மெட்விடேவ்
உலக டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது இடம் வகித்த 26 வயது ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையை அலங்கரித்து இருக்கிறார். கடந்த வாரம் நடந்த மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறியதன் மூலம் மெட்விடேவ் (8,615 புள்ளிகள்), முதலிடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை (8,465 புள்ளிகள்) 2-வது இடத்துக்கு தள்ளி முதலிடத்தை சொந்தமாக்கினார்.
2020-ம் ஆண்டு உலக டூர் இறுதி சுற்று போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மெட்விடேவ், கடந்த ஆண்டு (2021) அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார். அத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.
20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான 34 வயது நோவக் ஜோகோவிச் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாக நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்து இருந்தார். நம்பர் ஒன் இடத்தை மொத்தம் 361 வாரங்கள் பிடித்து சாதனை படைத்து இருந்த ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், கடந்த ஜனவரி மாதம் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க சென்ற அவரது விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு அவரை திருப்பி அனுப்பியது. இதனால் அவர் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்கவில்லை. அத்துடன் கடந்த வாரம் துபாயில் நடந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் அவர் கால்இறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டினார். இவை அவரது நீண்ட கால ‘நம்பர் ஒன்’ ஆதிக்கம் முடிவுக்கு வர காரணமாக அமைந்தது.
1973-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள ஆண்கள் ஒற்றையர் தரவரிசைபட்டியலில் முதலிடத்தை பிடித்த 27-வது வீரர் மெட்விடேவ் ஆவார். மேலும் அவர் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்த 3-வது ரஷிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்பு ரஷிய வீரர்களில் கபெல் நிகோவ் (1999-ம் ஆண்டு), மரட் சபின் (2000) ஆகியோர் முதலிடத்தை வகித்துள்ளனர். கடந்த 18 ஆண்டுகளில் ஜோகோவிச், ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகியோரை தவிர்த்து ‘நம்பர் ஒன்’ இடத்துக்குள் நுழைந்த முதல் வீரர் என்ற சிறப்பையும் மெட்விடேவ் தனதாக்கினார்.
‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்த டேனில் மெட்விடேவ் கருத்து தெரிவிக்கையில், ‘நம்பர் ஒன் இடத்தை பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வயதில் மட்டுமின்றி சமீபகாலங்களிலும் இது தான் எனது இலக்காக இருந்தது. டென்னிஸ் வீரர்கள் உள்பட பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.
ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (7,515 புள்ளிகள்) 3-வது இடத்தில் நீடிக்கிறார். மெக்சிகோ ஓபன் போட்டியில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபெல் நடால் (6,515 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தையும், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் (6,445 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும், ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் (5,000 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், இத்தாலி வீரர் பெரேட்டினி (4,928 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 7-வது இடத்தையும் பிடித்தனர். நார்வேயின் கேஸ்பர் ரூட் (3,915 புள்ளிகள்) 8-வது இடத்திலும், கனடாவின் அலியாசிம் (3,883 புள்ளிகள்) 9-வது இடத்திலும் தொடருகின்றனர். போலந்தின் ஹூபர்ட் ஹூர்காஸ் (3,496 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 10-வது இடத்தை பெற்றுள்ளார்.