Tamilசெய்திகள்

உலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார்.

அதாவது, கொரோனா வைரஸ் பிரச்சினையில் உலக சுகாதார நிறுவனம், சீனாவுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது என்று அவர் கூறினார்.

இதே போன்ற கருத்தை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரும், அதன் வெளியுறவு குழு மூத்த உறுப்பினருமான மைக்கேல் மெக்காலும் வைத்தார்.

இந்த நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், “கொரோனா வைரஸ் பிரச்சினையில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு மிகவும் சாதகமாக நடந்து கொள்கிறது என்று செனட் சபை எம்.பி. மார்கோ ரூபியோவும், பிரதிநிதித்துவ சபை எம்.பி. மைக்கேல் மெக்காலும் புகார் கூறி உள்ளனரே, இந்த கருத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு டிரம்ப் பதில் அளித்து கூறியதாவது:-

உலக சுகாதார நிறுவனம், சீனாவின் பக்கம் மிகவும் சாய்ந்து விட்டது. இதில் ஏராளமான மக்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் மிகவும் நியாயமற்று நடந்து கொள்கிறது என்ற பேச்சு பரவலாக எழுந்து இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனம், நியாயமுடன் நடந்து கொள்ளவில்லை என்று ஏராளமானோர் உணர்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனம் சீனாவின் பக்கம் மிகவும் சாய்ந்து விட்டது என்ற டிரம்பின் குற்றச்சாட்டு உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு மத்தியில் கிரேக் ஸ்டியூப் என்ற அமெரிக்க எம்.பி, “உலக சுகாதார நிறுவனம், சீனாவின் ஊது குழலாகவே மாறி விட்டது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் இதற்கான விளைவுகளை சந்தித்தாக வேண்டும்” என்று கண்டித்துள்ளார்.

இதே போன்று மற்றொரு அமெரிக்க எம்.பி.யான ஜோஷ் ஹாலேயும், கிரேக் ஸ்டியூப் குரலை எதிரொலித்துள்ளார். அவர் கூறும்போது, “இந்த தொற்று பரவி வருகிற கால கட்டத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாகவும், உலகத்துக்கு எதிராகவும் உலக சுகாதார நிறுவனம் சாய்ந்து விட்டது” என்று குறிப்பிட்டார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், மற்ற எம்.பி.க்களும் கருத்து தெரிவித்து இருப்பதற்கு நியாயமான காரணம் இருப்பதாக கருதப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனரான கெப்ரேய்சஸ், புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உருவானபோது அதை முடிவுக்கு கொண்டு வருவதில் சீன தலைமை உறுதியுடன் செயல்பட்டது என கூறிய கருத்துதான் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதான் பிரச்சினைக்கு காரணமாகவும் மாறி உள்ளது.

இவர் கடந்த ஜனவரி மாதம் சீனா சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்தார். அதே போன்று உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச மருத்துவ வல்லுனர்கள் குழுவும் சீனா சென்றது என்பது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *