உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் கொடுக்குமா? – காத்திருக்கும் பாரத் பயோடெக்
இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-5 ஆகிய 3 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் முற்றிலும் உள்நாட்டு கண்டுபிடிப்பான கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை.
அதாவது, அவசர பயன்பாட்டு பட்டியலில் சேர்க்கவில்லை.
இந்த அங்கீகாரத்தை பெறுவதற்காக கோவேக்சினை தயாரித்த பாரத் பயோடெக் என்ற ஐதராபாத் நிறுவனம், கோவேக்சின் பற்றிய அனைத்து தகவல்களையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள், மூன்று கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி உள்ளது.
இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அங்கீகாரம் வழங்கும். அக்குழுவின் கூட்டம் அக்டோபர் 6-ந் தேதி நடக்கிறது. அதில், தடுப்பூசியின் சிறப்பம்சங்களை பாரத் பயோடெக் நிறுவனம் விளக்குகிறது.
அதை நிபுணர் குழு விரிவாக ஆய்வு செய்யும். நிபுணர் குழு உறுப்பினர் ஹன்னா நோஹினெக், கோவேக்சின் தொடர்பான வரைவு சிபாரிசுகளை தாக்கல் செய்தார். அதன் மீது விவாதம் நடத்தப்படும். இறுதியாக, நிபுணர் குழு தனது சிபாரிசுகளை அளிக்கும். அதன் அடிப்படையில் கோவேக்சினை அங்கீகரிப்பது பற்றி முடிவு எடுக்கப்படுகிறது.