Tamilவிளையாட்டு

உலக கோப்பை ஹாக்கி – இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஜெர்மனி

ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில், ஜெர்மனி அணி காலிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஜெர்மனி அணியில் இடம்பெற்ற கிராம்புஷ் சகோதரர்கள் தனிச்சிறப்பு பெற்றுள்ளனர்.

ஒரே தேசிய அணிக்காக சகோதரர்கள் விளையாடுவது புதிதல்ல, ஆனால் இருவரும் ஒரே போட்டியில் கோல் அடிப்பது என்பது மிகவும் அரிது. அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணியின் கிராம்புஷ் சகோதரர்கள் (கிராம்புஷ் மேட்ஸ் மற்றும் கிராம்புஷ் டாம்) கோல் அடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.

போட்டியின் பெரும்பாலான நேரம் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி, 2-0 என முன்னிலையில் இருந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில், அதாவது 57வது நிமிடத்தில் மேட்ஸ், 58வது நிமிடத்தில் டாம் கோல் அடிக்க, போட்டி 2-0 என சமநிலை பெற்றது. இதனால் பெனால்டி ஷுட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில், ஜெர்மனி 4-3 என வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. சகோதரர்கள் மேட்ஸ் மற்றும் டாம் இருவரும் மான்செங்லாட்பாக் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரே கல்லூரியில் படித்து தற்போது கொலோனில் உள்ள ரோட்-வீஸ் கோல்ன் கிளப்பில் விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.