Tamilவிளையாட்டு

உலக கோப்பை வில்வித்தை போட்டி – 3 தங்கப்பதக்கம் வென்றது இந்தியா

உலக கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 1) குடெமலாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ‘ரிகர்வ்’ தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 7-3 என்ற கணக்கில் மெக்சிகோவின் அலிஜான்ட்ரா வாலென்சியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். உலக கோப்பை போட்டியில் தனிநபர் பிரிவில் அவர் வென்ற 3-வது தங்கம் இதுவாகும். ஆண்களுக்கான தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அதானு தாஸ் 6-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் டேனியல் கேஸ்ட்ரோவை தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் அதானு தாஸ், தீபிகா குமாரி ஆகியோர் இந்த ஆண்டுக்கான உலக கோப்பை இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த ஜோடி கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இல்வாழ்க்கையில் இணைந்தது நினைவிருக்கலாம்.

பெண்களுக்கான அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, அங்கிதா பாகத், கோமாலிகா பாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-4 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அதானு தாஸ், அங்கிதா பாகத் ஜோடி 6-2 என்ற கணக்கில் அமெரிக்க ஜோடியை தோற்கடித்து வெண்கலப்பதக்கம் வென்றது. உலக கோப்பை போட்டியின் ரிகர்வ் பிரிவில் இந்தியா 3 தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.