உலக கோப்பை மீது கால் வைத்தது மனதை காயப்படுத்தியது – முகமது ஷமி பேட்டி
இந்தியாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது. இதற்கிடையே உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பலர் கண்டனம், அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கூறியதாவது:-
உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் தனது கால்களை வைத்திருந்தது என் மனதை காயப்படுத்தியது. உலகில் உள்ள அனைத்து அணிகளும் வெல்ல போராடும் கோப்பை, உங்கள் தலைக்கு மேல் நீங்கள் தூக்க விரும்பும் கோப்பை மீது கால் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை.
ஆடுகளங்களின் தன்மையை முன்கூட்டியே சரி பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொதுவாக பந்து வீச்சாளர்கள் மைதானத்திற்கு வந்த பிறகு ஆடுகளத்தை சரி பார்க்கிறார்கள். நான் ஆடுகளம் அருகில் செல்வதில்லை. ஏனென்றால் நீங்கள் பந்து வீசும் போதுதான் அது எப்படி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். பிறகு ஏன் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை எளிமையாக வைத்திருப்பது நல்லது. உங்களை நிதானமாக வைத்திருங்கள். அப்போது தான் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.