X

உலக கோப்பை போட்டியில் நான் விளையாடியிருந்தால் இந்தியா வெற்றி பெற்று இருக்காது – சோயப் அக்தர் காட்டம்

இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக உலகக்கோப்பை போட்டியில் இரு அணிகள் மோதுகிறது என்றால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழும்.

இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்பின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்தியா 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் உடற்தகுதி காரணமாக இடம் பெறவில்லை.

இந்நிலையில் அந்த போட்டியில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்திருக்கும் என அக்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோயப் அக்தர் கூறியதாவது:-

2011 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் செய்த செயல் நியாயமற்றது. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் கடைசி 2 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என்று எனக்கு தெரியும். அதனால் உலகக் கோப்பையை வென்றுவிட்டு விடை பெறலாம் என்று ஆசைப்பட்டேன். ஆனால் உடற்தகுதியை காரணம் காட்டி அணி நிர்வாகம் எனக்கு வாய்ப்பு தரவில்லை. ஒருவேளை அரையிறுதிப் போட்டியில் நான் விளையாடியிருந்தால் நிச்சயம் சச்சின் மற்றும் சேவாக்கை அவுட் செய்து இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்திருப்பேன். ஆனால் நான் இல்லாமல் பாகிஸ்தான் தோற்றுவிட்டது. அந்த ஆட்டத்தை பார்த்து வேதனையாக இருந்தது. அதேபோல்தான் எனது தேசமும் இருந்தது.

இவ்வாறு சோயப் அக்தர் கூறினார்.