உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடந்து முடிந்துள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பெல்ஜியம் – ஜெர்மனி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த ஃபைனல் மேட்ச்சில் ஜெர்மனி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் நடப்பு சாம்பியனான பெல்ஜியம் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணி குரூப் டி-யில் இடம்பெற்றிருந்தது. இந்த பிரிவில் 2-ம் இடம்பிடித்ததால் முதலிடம் பெற்ற இங்கிலாந்து அணி நேரடியாக காலிறுதிக்கு சென்றது. இந்திய அணி கிராஸ் ஓவர் சுற்றில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கிளாசிஃபிகேஷன் ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்திய அணி 9-வது இடத்தை பிடித்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கிரஹாம் ரெய்ட் ராஜினாமா செய்துள்ளார். அவருடன் அனலைடிக் பயிற்சியாளர் கிரேக் கிளார்க், அறிவியல் ஆலோசகர் மிட்ச்செல் டேவிட் ஆகியோரும் இன்று தங்களது ராஜினாமாவை அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலீப் திர்கே கூறுகையில்:- இந்திய அணிக்கு கிரஹாம் ரெய்ட் அளித்த பங்களிப்பை நாங்கள் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்க பாடுபட்டுள்ளார். குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் அவர் அணியை சிறப்பாக கையாண்டார். அனைத்து பயணங்களும் கடினமான பாதையை தாண்டி செல்ல வேண்டும். அணியை புதிய முறையில் நாங்கள் அணுகுவதற்கான நேரம் வந்துவிட்டது. என்று அவர் தெரிவித்தார்.