உலக கோப்பை தொடரில் கலந்துகொள்ள உள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. சூப்பர் சிக்ஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின.
டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 32.2 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சீன் வில்லியம்ஸ் 56 ரன்னும், சிக்கந்தர் ராசா 31 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் தீக்சனா 4 விக்கெட்டும், மதுஷன்கா 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே 30 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து குசால் மெண்டிஸ், நிசங்காவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டது.
இறுதியில், இலங்கை ஒரு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த நிசங்கா சதமடித்து 101 ரன்னும், குசால் மெண்டிஸ் 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றது.