Tamilவிளையாட்டு

உலக கோப்பை ஜடேஜாவால் விக்கெட் எடுக்க முடியாது – முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா

இந்திய கிரிக்கெட் அணியில் அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவிபிஷ்னோய் ஆகியோர் சுழற்பந்து வீரர்களாக உள்ளனர். தொடரை பொறுத்தும், திறமையை பார்த்தும் அவர்களது தேர்வு இருக்கிறது. இவர்களில் யாரெல்லாம் 20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் அஸ்வின், ஜடேஜா, யுசுவேந்திர சாஹல், ரவிபிஷ்னோய் ஆகிய 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த போட்டியின் அடிப்படையில் தான் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இருக்கும்.

இந்த நிலையில் உலக கோப்பையில் ஜடேஜாவால் விக்கெட்டுகளை எடுக்க முடியாது என்று முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

20 ஓவர் உலக கோப்பை அணியில் ஜடேஜா இடம் பெற்றாலும் அவரால் அதிக விக்கெட்டுகளை எடுக்க முடியாது. 2021 உலக கோப்பைக்கு பிறகு விளையாடிய 7 போட்டிகளில் அவர் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அவருடைய பவுலிங் சராசரி 43க்கு மேல் உள்ளது. ஒரு ஓவருக்கான ரன்னும் அதிகமாக இருக்கிறது. அவர் மட்டுமின்றி அக்‌ஷர் படேல், அஸ்வினும் 20 ஓவர் போட்டிகளில் விக்கெட் கைப்பற்றும் பவுலர்களாக இல்லை. அக்‌ஷர் படேல் கடந்த உலக கோப்பைக்கு பிறகு 13 போட்டிகளில் 12 விக்கெட்களை கைப்பற்றினார். ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் படேல் ஆகிய 3 பேரால் 2 போட்டிகளுக்கு ஒரு விக்கெட்டை தான் எடுக்க முடிகிறது. 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை சுழற்பந்து வீரர்களில் யசுவேந்திர சாஹல் தான் பொருத்தமானவர். அவருக்கு அடுத்தபடியாக அணியின் பொருத்த மான சுழற்பந்து வீச்சாளர் யார் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும்.

இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.