உலக கோப்பை கிரிக்கெட் 2023 – புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது இந்தியா
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடந்தது. இதில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் 137 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், சிராஜ் , பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா 48 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்னும், ரோகித் சர்மா 46 ரன்னும், ஜடேஜா 39 ரன்னும், ஷ்ரேயஸ் அய்யர் 33 ரன்னும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவுசெய்தது. மேலும், உலக கோப்பை தொடரில் 20 ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து 2-வது இடத்திலும், 6 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் முறையே 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ளன.