நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மிச்செல் பிரேஸ்வெல். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடினார். இந்தியாவில் அக்டோபர்- நவம்பரில் நடைபெறும் உலகக்கோப்பையில் முக்கிய நபராக இருப்பார் என நியூசிலாந்து அணி நினைத்திருந்தது.
ஐ.பி.எல். தொடர் முடிந்தபிறகு இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் டி20 பிளாஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடினார். அப்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்தத் தொடரில் இருந்து விலகினார். நாளை மறுதினம் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. அதில் இருந்து மீண்டுவர அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர்- நவம்பரில் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த 15 மாதங்களாக எங்கள் அணிக்காக சிறப்பான பங்களிப்பை கொடுத்து வந்தார். பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என மூன்று துறையிலும் அவரது சிறப்பான திறனை நாங்கள் பார்த்துள்ளோம். உலகக்கோப்பைக்காக எங்களது அணியில் சிறந்த வீரராக தயாராகிக்கொண்டிருந்தார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கேன் வில்லியம்சனுக்கு ஐ.பி.எல். போட்டியின்போது காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக அவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு வீரர் காயத்தால் விலகியிருப்பது நியூசிலாந்து அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.