உலக கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி அறிவிப்பு

12-வது உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் உலகக் கோப்பையில் விளையாடும் அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா.

முன்னதாக உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news