உலககோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.
10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16-ந் தேதி மான்செஸ்டர் நகரில் நடக்கிறது.
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை ரசிகர்கள் எப்போதுமே ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள். இரு நாட்டு எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகள் இடையே நேரடி போட்டி தொடர் நடை பெறவில்லை. ஐ.சி.சி.யின் போட்டி தொடரில் மட்டும் மோதி வருகின்றன.
தற்போது உலககோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் இந்த வருடத்தின் மிகப் பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. இதன் விற்பனை தொடங்கிய 48 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாக மைதான நிர்வாகம் தெரிவித்தது. இதன்மூலம் இப்போட்டிக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இதில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் போட்டி கண்டிப்பாக நடைபெறும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.