உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் நேற்றுடன் ஒரு ஆட்டத்தில் மோதிவிட்டன. இன்று முதல் 2-வது போட்டியில் விளையாடுகின்றன. ‘ஏ’ பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் கத்தார்-செனகல் ( மாலை 6.30), நெதர்லாந்து-ஈக்வடார் ( இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.
போட்டியை நடத்தும் கத்தார் தொடக்க ஆட்டத்தில் 0-2 என்ற கணக்கில் ஈக்வடாரிடமும் , செனகல் 0-2 என்ற கணக்கில் நெதர்லாந்திடமும் தோற்று இருந்தன. இதனால் முதல் வெற்றியை பெறப் போவது யார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்து , ஈக்வடார் அணிகள் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. எனவே 2-வது வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள். ஐரோப்பா கண்டத்தில் உள்ள நெதர்லாந்து தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கிறது. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வடார் 44-வது வரிசையில் உள்ளது.
இரு அணிகள் மோதிய ஒரேயொரு ஆட்டம் டிரா ஆனது. குரூப் ‘பி’ பிரிவில் இன்று நடைபெறும் போட்டிகளில் வேல்ஸ்-ஈரான் (மாலை 3.30), இங்கிலாந்து-அமெரிக்கா (நள்ளிரவு 12.30 ) அணிகள் மோதுகின்றன. வேல்ஸ் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. ஈரான் அணி 2-6 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக போராடும்.
இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் ஈரானை நசுக்கியதால் அமெரிக்காவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும். அந்த அணி 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அமெரிக்க அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.