உலக கோப்பை ஆக்கி – காலியிறுதியில் இந்தியா தோல்வி

14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிந்து காலிறுதி போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கின.

நேற்று நடைபெற்ற காலிறுதியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 12வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் சிங் முதல் கோல் அடித்து முன்னிலை வகிக்க உதவினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், நெதர்லாந்து வீரர் தெய்ரி பிரிங்மேன் 19வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை ஆனது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர் மிங்க் வான் டான் வெய்ர்டன் 50வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் நெதர்லாந்து அணி 2 – 1 என முன்னிலை பெற்றது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை யாரும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில், நெதர்லாந்து அணி இந்தியாவை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் நெதர்லாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் தோற்றதன் மூலம் இந்தியா போட்டியில் இருந்து வெளியேறியது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools