X

உலக கோப்பை ஆக்கி – அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி

14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் இன்று மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அனி வீரர்கள் அபாரமாக ஆடினர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹுயூகோ ஜெனஸ்டெட் ஒரு கோல் அடித்தார்.

அவரை தொடர்ந்து 23-வது நிமிடத்தில் மற்றொரு வீரர் விக்டர் சார்லட் ஒரு கோலும், 26-வது நிமிடத்தில் மற்றொரு வீரரான அரிஸ்டைட் காய்ஸ்னி ஒரு கோலும் அடித்தனர். இதனால் பிரான்ஸ் அணி 3-0 என முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடியாக, ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் லூகஸ் மார்டினஸ் ஒரு கோல் அடித்தார்.
30-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் காஸ்பர்டு பாம்கார்டன் ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 44 மற்றும் 48-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கான்சால்டு பெய்லட் கோல் அடிக்க 3 – 4 என ஆனது. ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பிரான்கோயிஸ் கோயட் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், அர்ஜெண்டினா அணியை 5- 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் தோற்றாலும் அர்ஜெண்டினா அணி புள்ளிப்பட்டியலில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.

ஏ பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த ஸ்பெயின் அணி போட்டியை விட்டு வெளியேறியது.