உலக கோப்பை ஆக்கி – அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.
இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் அணி 6 -0 என்ற கணக்கில் இங்கிலாந்தை துவம்சம் செய்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இரண்டாவது அரையிறுதி போட்டி ஆஸ்திரேலியா அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையே இன்று இரவு நடைபெற்றது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நெதர்லாந்து வீரர் கிளென் ஷுர்மான் 9வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து, 20வது நிமிடத்தில் நெதர்லாந்தை சேர்ந்த சிவி வான் ஆஸ் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் நெதர்லாந்து 2 -0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 45வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிம் ஹோவர்டு தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இறுதிவரை போராடிய ஆஸ்திரேலிய வீரர்கள், ஆட்டத்தின் இறுதி வினாடியான 60வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து வெற்றியாளரை தேர்வு செய்ய பெனால்டி ஷூட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 4 – 3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
உலக கோப்பை ஹாக்கி தொடரில் பெனால்டி ஷுட் முறை இந்த போட்டியில்தான் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.