உலக கோப்பை அணிக்கு ரிஷப் பந்த் தேர்வாகதது சரியா?

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு நேற்று அறிவித்தது.

தமிழகத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் கார்த்திக், 28 வயதான விஜய் சங்கர் ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினேஷ் கார்த்திக் 2-வது முறையாக உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2007 போட்டியில் ஆடினார். வெஸ்ட் இண்டீசில் நடந்த இந்த உலக கோப்பையில் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. விஜய்சங்கர் உலக கோப்பையில் அறிமுகமாகிறார்.

இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக டோனி இருக்கிறார். 2-வது விக்கெட் கீப்பராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பதில் இளம் வீரரான ரி‌ஷப் பந்த், அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் இடையே கடும் போட்டி நிலவியது.

அதிரடி பேட்ஸ்மேனான ரி‌ஷப் பந்த் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வு குழுவினர் அவரை நிராகரித்துவிட்டு தினேஷ் கார்த்திகை தேர்வு செய்தனர்.

உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரி‌ஷப் பந்தை புறக்கணித்த தேர்வு குழுவின் முடிவு தவறானவை என்ற எண்ணம் எதிரொலிக்கிறது.

ரி‌ஷப் பந்தை தேர்வு செய்யாதது தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வல்லவருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

பெரும்பாலான தேர்வு குழுவினர் ரிஷப் பந்தை சேர்ப்பதாகவே இருந்தனர். உலக கோப்பை போட்டி மிகப்பெரியது என்பதால் திறமைக்கு பதிலாக அனுபவத்துக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்தது. தினேஷ் கார்த்திகை தேர்வு செய்தது. 90 நிமிடம் நடந்த விவாதத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவின் 4-வது வரிசை இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த வரிசைக்கு ரி‌ஷப் பந்தை அனுப்பி இடத்தை நிரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தேர்வு குழுவினர் இதை செய்ய தவறிவிட்டனர்.

இங்கிலாந்து போன்ற ஆடுகளத்தில் ரி‌ஷப் பந்த் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக தேவை. 2-வது விக்கெட் கீப்பர் என்ற முறையில் இல்லாமல் அவரை 4-வது வரிசைக்கு தேர்வு செய்து இருக்கலாம்.

ஏனென்றால் ரிசப் பந்த் விக்கெட் கீப்பிங்கில் இன்னும் முதிரிச்சி அடையவில்லை. ஒரு பேட்ஸ்மேனாக அவரை தேர்வு செய்வது அவசியமானது.

எதிர்கால இந்திய அணிக்கு அவரை போன்ற அதிரடி பேட்ஸ்மேன் தேவை. இதனால் தேர்வு குழுவினர் அவரை நிராகரித்த முடிவு சரியானதுதானா? என்ற கேள்வி எழுகிறது.

தினேஷ் கார்த்திகை பொறுத்தவரை 20 ஓவர் போட்டியில்தான் நன்றாக ஆடி வருகிறார். இதனால் உலக கோப்பை அணியில் அவரது தேர்வு பல்வேறு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘டெத் ஓவர்’ என்று அழைக்கப்படும் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் விளையாடுவதில் ரி‌ஷப் பந்த் கெட்டிக்காரர். இளம் வீரராக கருதப்படும் அவருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்து இருக்கலாம்.

தேர்வு குழுவின் இந்த முடிவானது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகந்த ஏமாற்றம் அடைந்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news