உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 3-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த உலகக்கோப்பையை இங்கிலாந்து கைப்பற்ற அதிகமான வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வரலாறுபடி பார்த்தால் இங்கிலாந்து உலகக்கோப்பையை வெல்லும். 2011-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா நடத்தி கோப்பையை வென்றது. 2015-ம் ஆண்டு உலக கோப்பையை நடத்தி ஆஸ்திரேலியா பட்டம் வென்றது. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. அந்த அணி உலகக்கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் இங்கிலாந்து அணி தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 5 முறை வென்றுள்ளது. அந்த அணி 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது.
இந்தியா (1983, 2011), வெஸ்ட் இண்டீஸ் (1975, 1979) அணிகள் தலா 2 முறையும், பாகிஸ்தான் (1992), இலங்கை (1996) அணிகள் தலா ஒருமுறையும் உலகக்கோப்பையை கைப்பற்றி உள்ளன.