Tamilவிளையாட்டு

உலக கோப்பையில் மன் கவுட் முறை அவுட் அதிகமாக இருக்கும் – அஸ்வின் எச்சரிக்கை

சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷதாப் கானை பரூக்கி மன்கட் செய்தார். இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாபர் அசாம் மிகவும் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். அவர் ஆப்கான் சீனியர் வீரர் முகமது நபியுடன் நீண்ட வாதத்தில் ஈடுபட்டார். ஆப்கான் வீரர்களிடம் கைகுலுக்கவே மறுத்தார் ஷாஹின் ஷா அஃப்ரீடி. இந்தச் சம்பவம் குறித்து இந்திய வீரர் அஸ்வின் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

உலகக் கோப்பை அரையிறுதியில் அல்லது ஒரு நெருக்கடியான ஆட்டத்தில் கோலி, ரோகித், ஸ்மித், ரூட் அல்லது எந்த ஒரு முக்கியமான பேட்டரையும் இப்படி மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதை கற்பனை செய்து பாருங்கள். அவ்வளவுதான் நரகமே இடிந்து விழுந்தது போல் கூக்குரல்கள் எழும். இன்னும் பலரும் இதனை ஒரு அவுட் ஆக்கும் முறையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. எந்த பேட்டராக இருந்தாலும் என்ன சூழ்நிலையாக இருந்தாலும் பவுலர் கையை சுத்துவதை நெருக்கமாக கவனித்து அதன் பிறகே கிரீசிலிருந்து கிளம்ப வேண்டும். இதைச்செய்யாமல் முன்னாடியே கிரீசை விட்டு வெளியேறி மன்கட் செய்யப்பட்டு அவுட் ஆனால் அந்த பவுலரை கரகோஷம் செய்து பாராட்டி பேட்டரிடம் நீங்கள் இன்னும் கொஞ்சம் யோசித்துச் செயல்பட்டிருக்கலாம் என்றுதான் கூற வேண்டும்.

பவுலர் ஆக்ஷனை பூர்த்தி செய்யவே இல்லை. அவர் இதனை 5-வது அல்லது 6வது ஓவரில் செய்ய வேண்டியது தானே” என்ற வாதங்கள் நொண்டிச்சாக்குதான். பவுலர் கையைச் சுழற்றி பந்தை டெலிவரி செய்யத் தயாராகி விட்டு ரன்னர் முனை பேட்டரை ரன் அவுட் செய்ய முடியாது. ஏனெனில், விதிப்படி அது தவறு. இப்போது எல்லா அணிகளும் இதைச் செய்வதில்லை. ஆனால் உலகக்கோப்பை வருவதால் நிச்சயம் இதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

சும்மா ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் பேசி நாங்கள் என்ன ஆனாலும் அப்படிச் செய்ய மாட்டோம் என்று சொல்வதெல்லாம் எதிரணியினருக்கு ஒரு சாளரத்தை திறந்து விடுவதில்தான் போய் முடியும். எந்த ஒரு அணியும் தங்கள் வழியில் வரும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் உலகக்கோப்பையை வெல்வதென்பது வாழ்நாள் சாதனையல்லவா. சிலருக்கு வெற்றி பெறுவதுதான் அனைத்தும். மற்ற சிலருக்கு அப்படி இல்லாமல் இருக்கலாம். நாம் இரண்டு நிலைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கிரிசிற்குள் நில்லுங்கள்! நிம்மதியாக வாழுங்கள்!

இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.