உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் மட்டும் தோற்றுவிடாதீர்கள் – ஷிகர் தவான் கோரிக்கை
ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவது இல்லை. ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன.
இந்த வருடம் 2023 ஆசிய மற்றும் 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 50 ஓவர் உலக கோப்பையில் 1992 முதல் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததால் இம்முறை உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க பாகிஸ்தான் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த வருடம் ஆசிய மற்றும் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லாவிட்டாலும் பாகிஸ்தானை தோற்கடித்து கௌரவத்தையும் மானத்தையும் காப்பாற்றுமாறு இந்திய அணிக்கு ஷிகர் தவான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது போன்ற சூழ்நிலையில் எப்போதுமே நீங்கள் உலக கோப்பையை வெல்கிறார்களோ இல்லையோ பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக் கூடாது என்பதை அனைவரும் விருப்பமாக இருக்கும். ஆனாலும் நீங்கள் உலக கோப்பையை வெல்வதே முக்கியமாகும். கடவுளின் ஆசிர்வாதத்துடன் அதை நாம் செய்வோம் என்று நம்புகிறேன்.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது நிச்சயமாக சுவாரசியமும் அதிகப்படியான அழுத்தமும் இருக்கும். அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி முடிவடையும் போது கண்டிப்பாக ஒரு திருப்திகரமான உணர்வு எங்களுக்கு இருக்கும். ஏனெனில் நான் விளையாடிய போது பெரும்பாலும் நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக வென்றுள்ளோம். அந்த போட்டியில் எப்போதுமே எதிர்பார்ப்புகள் உச்சமாக இருக்கும். அத்துடன் பாகிஸ்தான் அணியுடனும் நாங்கள் சிலவற்றை பேசுவோம்.
என்று அவர் கூறினார்.
இருப்பினும் இரு அணிகளுக்கும் சமமாக பேசாத காரணத்தால் அவர் பேசிய அந்த வீடியோவை முதலில் டுவிட்டரில் பதிவிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு நிறுவனம் பின்னர் டெலிட் செய்து விட்டது.