உலக காவல்துறை ஹெப்டத்லான் போட்டி – சென்னை காவல்துறையில் ஏட்டாக பணியாற்றும் பெண் தங்கப்பதக்கம் வென்று சாதனை
கனடா நாட்டில் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி முதல், ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி வரை உலக காவல்துறை மற்றும் தீ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் 7 விளையாட்டு பிரிவுகள் (100 மீட்டர் தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்) அடங்கிய ‘ஹெப்டத்லான்’ போட்டியில் சென்னை காவல்துறையில் நவீன கட்டுப்பாட்டு அறையில், காவல்கரங்கள் பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு லீலாஸ்ரீ தங்க பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் அவர் 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், உயரம் தாண்டும் போட்டியில் வெண்கலப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய, தமிழக மற்றும் சென்னை காவல்துறைக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிகிறது. வரும் 14-ந் தேதி சென்னை திரும்பும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.