X

உலக ஆக்கி தொடர் – இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது

8 அணிகள் பங்கேற்ற 2-வது உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்தது. இதில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 16-வது இடத்தில் உள்ள தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணியின் தாக்குதல் ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்க அணி தடுமாறியது. 2-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் வருண்குமார் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் அடித்தார். இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் 11-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தியும், 25-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தியும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.

35-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் விவேக் பிரசாத் கோல் அடித்தார். 49-வது நிமிடத்தில் இந்திய அணியின் வருண்குமார் மீண்டும் ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ரிச்சர்ட் 53-வது நிமிடத்தில் ஆறுதல் கோல் திருப்பினார்.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பான் அணி 4-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை சாய்த்து 3-வது இடத்தை சொந்தமாக்கியது. தோல்வி கண்ட அமெரிக்கா 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ர‌ஷியா, போலந்து, மெக்சிகோ, உஸ்பெகிஸ்தான் அணிகள் முறையே 5 முதல் 8 இடங்களை பெற்றன. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, 2-வது இடம் பிடித்த தென்ஆப்பிரிக்கா அணிகள் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டியில் விளையாட தேர்வாகி இருக்கின்றன.

Tags: sports news