X

உலகிலேயே இந்தியாவின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது – இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் இன்ஃபோசிஸ். இதன் இணை நிறுவனர்களில் ஒருவர் தான் 77 வயதான நாராயண மூர்த்தி. இந்த வயதிலும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் நாராயண மூர்த்தி தெரிவித்த சமீபத்திய கருத்து சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியது.

யூடியூப் தளத்தில் வெளியான தி ரெக்கார்டு எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் இன்ஃபோசிஸ் முன்னாள் தலைமை நிதி அலுவலர் மோகன்தாஸ் பை ஆகியோர் கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலில் அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதில் பெரும்பாலானவை தேசத்தை கட்டியெழுப்புவது, தொழில்நுட்பம், இளைஞர்கள் போன்ற தலைப்புகளை சார்ந்து இருந்தது.

அந்த வகையில் பேசும் போது இன்றைய இளைஞர்கள் தற்போது இருப்பதை விட கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் தனது இலக்கு பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது, இந்தியாவில் உற்பத்தி திறனை அதிகப்படுத்தி, அரசாங்கத்தால் ஏற்படும் தாமதங்களை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், “உலகிலேயே இந்தியாவின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனை மேம்படுத்தவும், அரசாங்கத்தில் இருக்கும் ஊழலை ஓரளவுக்கு குறைக்கவும் முயற்சிக்க வேண்டும். ஊழல் பற்றி படித்தவரையில், உண்மை நிலவரம் எனக்கு தெரியாது. ஆனால், அரசாங்கத்தால் ஏற்படும் தாமதங்களை குறைக்காமல், அதிகளவு திறன் படைத்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியாது.”

“இதற்கு என்னுடைய வேண்டுகோள் ஒன்று மட்டும்தான். நம் நாட்டின் இளைஞர்கள், ‘இது என்னுடைய நாடு, நான் வாரத்திற்கு 70 மணி நேரம் நிச்சயம் வேலை செய்ய விரும்புகிறேன்’ என்று கூற வேண்டும்,” என்று தெரிவித்து உள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனது கருத்துடன் வரலாற்று எடுத்துக்காட்டுக்களையும் முன்வைத்தார்.