இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. காலை வேளையில் பணிக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என அனைவரும் வெயிலின் கொடூரமான தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக வெப்பமயமாதலால் இந்தியாவின் பல்வேறு இடங்களில் தண்ணீருக்கு வரலாறு காணாத வகையில் இம்முறை பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்க அரசும், சமூக ஆர்வலர்களும் பல வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உலகிலேயே அதிக வெப்பமான நகரம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு என தெரிய வந்துள்ளது.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக 120 ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த 1ம் தேதி 124.5 ஃபாரன்ஹீட் வெப்பம் சுரு பகுதியில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் வேலை செய்யும் மக்கள் பலரும் தங்கள் கால அட்டவணையை மாற்றி கொண்டுள்ளனர். மேலும் வாழ்க்கை முறையிலும் மாற்றம் செய்துள்ளனர்.
இங்கு மதிய வேளையில் உணவை தவிர்த்து வெறும் மோர் மட்டுமே குடித்து வருவதாகவும், தண்ணீர் இன்றி இருக்கவே முடியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், 10 கிலோ அளவிலான பனிக்கட்டிகளை வாங்கி வந்து ஏர்கூலர் இயந்திரத்திலும், தண்ணீர் தொட்டிகளிலும் தினமும் போட்டு வைப்பதாக தெரிவித்துள்ளனர்.