X

உலகின் மிக நீளமான சாலை சுரங்கப்பாதை! – பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இமாசலபிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு செல்லும் சாலை, பனிக்காலத்தில் கடுமையான பனிச்சரிவால் மூடப்பட்டு விடும். இதனால், லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு, ஆண்டுக்கு 6 மாதங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். இதை கருத்தில்கொண்டு, மணாலி-லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்க ரோதங் என்ற இடத்தில் சுரங்கப்பாதை கட்ட கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் 3-ந்தேதி, அப்போதைய வாஜ்பாய் அரசு முடிவு செய்தது.

அதையடுத்து, கட்ட தொடங்கப்பட்ட ரோதங் சுரங்கப்பாதைக்கு வாஜ்பாய் நினைவாக ‘அடல் சுரங்கப்பாதை’ என்று பெயர் சூட்ட கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மோடி அரசு முடிவு செய்தது. எல்லை சாலை அமைப்பு, தொடர்ந்து போராடி சுரங்கப்பாதை பணிகளை நிறைவு செய்துள்ளது.

இதனையடுத்து அடல் சுரங்கப்பாதை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சுரங்கப்பாதையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பளித்தார். திறப்பு விழாவை தொடர்ந்து, லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கில் சிஸ்சு என்ற இடத்திலும், மற்றும் சோலங்கி பள்ளத்தாக்கிலும் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இது, உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகும். 9.02 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை மூலம் எல்லா வானிலை காலத்திலும், மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்குக்கு செல்லலாம்.

இப்பாதை காரணமாக, சுற்றி செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், மணாலி-லே இடையிலான தூரம் 46 கி.மீ. குறையும். பயண நேரம் 5 மணி நேரம் குறையும். கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில், அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இது, இருவழி சுரங்கப்பாதை ஆகும். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் கார்களும், 1,500 சரக்கு வாகனங்களும் செல்லும்வகையில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.