உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமான கங்கா விலாஸ் சொகுசு கப்பல் பயணம்! – பிரதமர் மோடி 13 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் வரை செல்லும் சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ‘கங்கா விலாஸ்’ எனப்படும் சொகுசு கப்பல் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த உல்லாச பயணத்தில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் உள்ளடக்கப்பட்டு உள்ளன.
இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் பல்வேறு நதிகள் வழியாக இந்த கப்பல் செல்கிறது. உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் இந்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதற்கான பணிகளை வாரணாசி மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது. வாரணாசி மாவட்ட கலெக்டர் ராஜலிங்கம் மற்றும் மண்டல கமிஷனர் கவுஷல் ராஜ் சர்மா ஆகியோர் இதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் கிடைக்கவில்லை. எனினும் இந்த தொடக்க விழாவுக்கான பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருவதாக உத்தரபிரதேச சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது.
வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இருந்து கிளம்பும் இந்த சொகுசு கப்பல் காசிப்பூர், பங்சார், பாட்னா வழியாக கொல்கத்தாவை அடைகிறது. பின்னர் வங்காளதேசம் வழியாக மொத்தம் 3,200 கி.மீ. பயணம் செய்து அசாமின் திப்ருகரை மார்ச் 1-ந்தேதி அடைகிறது.
வங்காளதேசத்தில் மட்டும் 15 நாட்கள் இந்த கப்பல் பயணம் செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய 2 நதிகளான கங்கை மற்றும் பிரம்மபுத்ராவில் இந்த கப்பல் பயணம் செய்வது சிறப்பாகும். 50 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலாவில் உலக பாரம்பரிய தலங்களாக அடையாளப்படுத்தப்பட்டவை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க முடியும்.
மேலும் சுந்தர்பன் டெல்டா மற்றும் காசிரங்கா தேசிய பூங்கா உள்ளிட்ட புகழ்பெற்ற சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்கா வழியாகவும் இந்த சுற்றுலா திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்டாரா மற்றும் ஜே.எம்.ராக்சி என்ற தனியார் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து இயக்கும் இந்த ஆடம்பர சொகுசு கப்பலில் பல்வேறு நவீன வசதிகள் அடங்கி உள்ளன. குறிப்பாக, தொலைநோக்கு பார்வையுடன் தனித்துவமான வடிவமைப்புகளை கொண்டுள்ள இந்த கப்பல் 3 மாடிகளை கொண்டது. இந்த கப்பலில் 18 கேபின்கள் உள்ளன. எல்.இ.டி. டி.வி., நவீன படுக்கை வசதி, பால்கனி, உணவகம், ஸ்பா என ஏராளமான ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.