Tamilவிளையாட்டு

உலகின் சிறந்த விளையாட்டு வீரர் விருது பெற்ற ஜோகோவிச்

ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி சாதனை படைக்கும் வீரர்-வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வருபவர்களுக்கு 2000-ம் ஆண்டு முதல் மொனாக்கோவை சேர்ந்த லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கும் விழா மொனாக்கோவில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடைபெற்றது.

இதில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் (செர்பியா) சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார். இந்த விருதை அவர் 4-வது முறையாக கைப்பற்றி உள்ளார். கடந்த ஆண்டு காயத்தில் இருந்து மீண்டு களம் கண்ட ஜோகோவிச் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். அத்துடன் கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். இது அவரது 15-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

அமெரிக்காவை சேர்ந்த 21 வயதான ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனே பைல்ஸ் சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் ஒலிம்பிக் போட்டியில் 4 தங்கப்பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 14 தங்கப்பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சரிவில் இருந்து மீண்டு வந்த வீரருக்கான விருதை அமெரிக்காவை சேர்ந்த கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் பெற்றுள்ளார்.

2018-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தையும், கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் வென்ற ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா திருப்புமுனை ஏற்படுத்திய வீராங்கனை விருதை தனதாக்கி இருக்கிறார். உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் கால்பந்து அணி சிறந்த அணிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுக்கான நல்லெண்ண விருதுக்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த யுவா என்ற தன்னார்வ அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு ஊரக பகுதியில் உள்ள கால்பந்து வீராங்கனைகளை அடையாளம் கண்டு பயிற்சி அளித்து அவர்களது திறமையை வளர்த்து வருகிறது. இந்த அமைப்பின் மூலம் 450 வீராங்கனைகள் கால்பந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களில் ஹேமா, நீதா, ராதா, கோனிகா ஆகியோர் விழாவில் நேரில் கலந்து கொண்டு இந்த விருதை பெற்றுக் கொண்டனர். இந்தியாவை சேர்ந்த ஒரு அமைப்புக்கு இந்த விருது கிடைப்பது இது 3-வது முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *