X

உலகளவில் 16 கோடி மக்களை வறுமையில் தள்ளிய கொரோனா மற்றும் உக்ரைன் போர்!

கொரோனா தொற்றுநோய், வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் ரஷிய- உக்ரைன் போர் ஆகியவற்றால் உலகின் பல நாடுகளில் 2020 முதல் தற்போது வரை சுமார் 16 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை நேற்று தெரிவித்தது.

சுமார் ரூ.160-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை கடுமையான வறுமையில் இருப்பவர்கள் என்றும் ஒரு நாளைக்கு சுமார் 250-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2020- 2023 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் 7.5 கோடி மக்கள் கடுமையான வறுமையிலும், 9 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழேயும் வாழ்கிறார்கள்.

ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2023-ல் அவர்களின் வருமானம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே சென்றிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மக்களை வறுமைக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு வலைகளை உருவாக்குவதில் முதலீடு செய்துள்ள நாடுகள், மக்கள் வறுமையில் விழுவதை கணிசமான எண்ணிக்கையில் தடுத்துள்ளன.

ஆனால் மிகவும் கடன்பட்டுள்ள நாடுகளில் அந்நாடுகளின் கடனுக்கும், முறையற்ற சமூக செலவினங்கள் மற்றும் வறுமையின் அதிகரிப்பிற்கும் தொடர்பிருக்கிறது என்று ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP) எனும் அமைப்பின் தலைவர் அச்சிம் ஸ்டெய்னர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பொருளாதார ரீதியாக போராடும் நாடுகள், கடனை திருப்பிச் செலுத்துவதை ஒரு இடைநிறுத்தம் செய்து சமூக வளர்ச்சி செலவினங்களுக்கும், பொருளாதார அதிர்ச்சிகளின் விளைவுகளை எதிர்ப்பதற்கும் செலவிடும்படி அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

சிக்கலான பிரச்சனையென்றாலும் தீர்வு எட்டும் தூரத்தில்தான் உள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது. இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட மற்றொரு ஐ.நா அறிக்கையின்படி, சுமார் 330 கோடி பேர் (3.3 பில்லியன்); அதாவது (கிட்டத்தட்ட மொத்த மக்கள் தொகையில் பாதி), கல்வி மற்றும் சுகாதாரத்தை விட கடனுக்கான வட்டிக்கு அதிகமாகச் செலவழிக்கும் நாடுகளில் வாழ்கின்றனர்.

வளரும் நாடுகள் குறைந்த அளவிலான கடனைக் கொண்டிருந்தாலும், அதிக வட்டியை செலுத்துகின்றன. புதிதாக ஏழ்மைக்கு தள்ளப்பட்டிருக்கும் 165 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான வருடாந்திர செலவு 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என இந்த அறிக்கை கூறுகிறது.

இந்த வார தொடக்கத்தில், சர்வதேச நிதி நிறுவனங்களை சீர்திருத்தம் செய்ய அழுத்தம் கொடுத்து வரும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “நமது காலாவதியான உலகளாவிய நிதி அமைப்பு, அது உருவாக்கப்படும்போது இருந்த காலனித்துவ ஆதிக்க கொள்கைகளையே இன்றும் பிரதிபலிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

Tags: tamil news