X

உலகத் தாய்மொழி நாள் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

“உலகத் தாய்மொழி நாள்” தினத்தையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியைப் போற்றிப் பாதுகாத்திடும் வகையில் உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் நாளன்று, தமிழ் மொழியின் சிறப்பை இளைய தலைமுறையினர் அறிந்திடும் விதமாக மாநில அளவில் கவியரங்கம், கருத்தரங்கம் போன்றவை நடத்தப்பட்டு, அம்மாவின் அரசால் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

கணினித் தமிழ் வளர்ச்சிக்காக “முதல்- அமைச்சர் கணினித் தமிழ் விருது”, பெண் எழுத்தாளர்களைப் பெருமைப் படுத்திட “அம்மா இலக்கிய விருது”, மாவட்டந்தோறும் தமிழ் ஆர்வலர்களுக்கு “தமிழ்ச் செம்மல் விருது” மற்றும் “சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது”, அயல் நாட்டில் வாழும் தமிழறிஞர்களைப் பாராட்டும் வகையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் விருதுகளான இலக்கிய விருது, இலக்கண விருது, மொழியியல் விருது போன்ற பல்வேறு விருதுகளை வழங்கி வருவதோடு, தமிழறிஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தேவநேயப்பாவாணர் விருது, அருள் நிறை காரைக்கால் அம்மையார் விருது, வீரமா முனிவர் விருது, சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது, சி.பா. ஆதித்தனார் வார இதழ் விருது, சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது ஆகிய புதிய விருதுகளை அறிவித்து, விருதுகளின் எண்ணிக்கையை 72 ஆக உயர்த்தி உள்ளது.

தமிழ்நாட்டின் எல்லையைக் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட எல்லைக் காவலர்களுக்கு மாதந்தோறும் ரூ.4500 உதவித் தொகையும், எல்லைக் காவலர்களின் மரபுரிமையர்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகையும், தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3500 உதவித் தொகையும், தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 உதவித் தொகையும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கும், அவர்களின் மரபுரிமையர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகையும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 10 கோடி ரூபாயும், ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 1 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.

“தமிழ் என்பது இனத்தையும், நாட்டையும், பண்பாட்டையும் சுட்டிக்காட்டும் உன்னதமான அடையாளம்” என்றார் அம்மா. அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அவர்தம் நெறியில் தமிழ் காத்து, தமிழ்நாட்டை வளர்த்து வருகிறது. இந்நன்னாளில் நாம் அனைவரும் விழிபோல் எண்ணி நம் மொழியை காக்க வேண்டும் என்ற உறுதியோடு அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: south news