பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் அபிஷேக் வர்மா நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிச்சுற்றில் 244.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 221.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் துருக்கியைச் சேர்ந்த இஸ்மாயில் கெலஸ் 243.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். இவர்களில் அபிஷேக் வர்மாவும், சவுரப் சவுத்ரியும் உள்ளனர்.
50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார். அத்துடன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றார்.
இதேபோல் முதல் நாளில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார்.
இதன்மூலம் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா மொத்தம் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.