உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி வரும் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி போட்டிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அகமதாபாத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக அகதாபாத் காவல் துறை ஆணையர் தெரிவித்து உள்ளார்.
போட்டியின் போது, 7 ஆயிரம் காவலர்கள், 4 ஆயிரம் ஹோம் கார்டுகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நகரின் மிகமுக்கிய பகுதிகள் மற்றும் பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட இருக்கிறது. நான்கு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள், காவல் துறை தலைவர் என காவல் துறையை சேர்ந்த உயரதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வை செய்ய உள்ளனர்.