X

உலகக் கோப்பை கிரிக்கெட் – நாளை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடக்கும் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா தான் மோதிய 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளது. இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, கப்மன்கில், வீராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சமி, பும்ரா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். கடந்த போட்டியில் முகமது சிராஜும் சிறப்பாக செயல்பட்டார். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், ஜடேஜா உள்ளனர். ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, வெற்றி உத்வேகத்தை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கும்.

பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி 7 ஆட்டத்தில் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அரை இறுதியை நெருங்கிவிட்ட தென் ஆப்பிரிக்கா நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அதை உறுதி செய்துவிடும். அந்த அணி பேட்டிங்கில் குயின்டான் டி காக், மார்க் ராம், வான்டெர்துசன், கிளாசன், டேவிட் மில்லர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதில் குயின் டான் டி காக் 545 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். பந்து வீச்சில் மார்கோ ஜேன்சன், ரபடா, மகராஜ், கோட்சி ஆகியோர் உள்ளனர்.

தென்ஆப்பிரிக்கா 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நெதர்லாந்திடம் மட்டும் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மற்ற ஆட்டங்களில் அந்த அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: tamil sports