X

உலகக் கோப்பை கிரிக்கெட் – நெதர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் – நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லி பரேசி- மேக்ஸ் ஓ டாவ்ட் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே வெஸ்லி பரேசி அவுட் ஆனார். இதனையடுத்து கேம்ஸ் ஓ டாவ்ட் – அகேர்மான் ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேக்ஸ் ஓ டாவ்ட் 43 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் அகேர்மான் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். 92 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பறிக் கொடுத்தனர்.

சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மட்டுமே நிலைத்து ஆடி 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் நபி 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான குர்பாஸ் மற்றும் சத்ரான் முறையே 10 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரகமத் ஷா தன் பங்கிற்கு 52 ரன்களையும், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிடி 56 ரன்களையும் குவித்தனர்.

போட்டி முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் ஷஹிடி 56 ரன்களுடனும், உமர்சாய் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tags: tamil sports