Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் – நாளை நியூசிலாந்து, பாகிஸ்தான் மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பெங்களூருவில் நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றி கட்டாயத்தில் களம் இறங்குகின்றன. நியூசிலாந்து அணி 7 ஆட் டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி மூன்று ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியது. அரை இறுதி வாய்ப்பை வலுப்படுத்தி கொள்ள நாளைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது நியூசிலாந்துக்கு கட்டாயமாகும். இதனால் வெற்றி பாதைக்கு திரும்ப அந்த அணி முயற்சிக்கும்.

அந்த அணியில் கான்வே, ரவீந்திரா, பிலிப்ஸ், டாம்ல தாம், மிட்செல், சான்ட்னர், போல்ட், ஹென்றி ஆகிய வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தான் 7 ஆட்டத்தில் 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி அரை இறுதி வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். மேலும் மற்ற ஆட்டங்களின் முடிவுகளும் சாதகமாக இருக்க வேண்டும். இதனால் பாகிஸ்தான் வெற்றிக்காக போராடும். அந்த அணியில் அப்துல்லா ஷபீக், கேப்டன் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், பாகர் ஜமான், அப்ரிடி, ஹா ரிஸ்ரவூப் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

நாளை மதியம் 2 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியா 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அரை இறுதி வாய்ப்பை அதிகரித்து கொள்ள இப்போடடியில் வெற்றி பெறும் முனைப்பில் ஆஸ்திரேலியா உள்ளது. அந்த அணி கடைசி நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் நாளைய ஆட்டத்தில் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றுள்ளது. 5 ஆட்டத்தில் தோற்றது. இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. எஞ்சிஉள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைப்பது மிகவும் சிரமம். அந்த அணி ரன் ரேட்டிலும் (-1.652) மிகவும் மோசமாக உள்ளது. இருந்த போதிலும் உலக கோப்பையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் அந்த இலக்கை அடைய இங்கிலாந்து முயற்சிக்கும்.