Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் – தொடர் தோல்வியால் நியூசிலாந்து அணிக்கு ஏற்பட்ட சிக்கல்

இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை நியூசிலாந்து வீழ்த்தியது. அதன்பின் தொடரந்து நெதர்லாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை துவம்சம் செய்தது.

இதனால் நியூசிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்தது. சிறப்பாக விளையாடும் நியூசிலாந்து அணி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதன்பின்தான் அந்த அணிக்கு சோதனை காத்திருந்தது. 5-வது போட்டியில் இந்தியாவுக்கு எதிராகவும், 6-வது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்தது. அத்துடன் நேற்று தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 190 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனால் 7 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இன்னும் பாகிஸ்தான், இலங்கை அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இந்த போட்டிகளில் தோல்வியடைந்தால் அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்படும். தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று, அதன்பின் ஹாட்ரிக் தோல்வியால் நியூசிலாந்து அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு உலகக் கோப்பை போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி, வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது.