உலகக் கோப்பை கிரிக்கெட் – இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவ், தாவித் மலான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் இங்கிலாந்து 13 ரன்கள் எடுத்தது. 4 ஓவரில் 26 ரன்கள் எடுத்ததால் இங்கிலாந்து நல்ல தொடக்கத்துடன் விளையாடியது. 5-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் தாவித் மலானை (16) வீழ்த்தினார். அடுத்த பந்தில் ஜோ ரூட்டை டக்அவுட்டில் வெளியேற்றினார்.
அதன்பின் இங்கிலாந்து அணி தடம் புரண்டது. பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முகமது ஷமி பந்தில் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும், பேர்ஸ்டோவ் 14 ரன்னிலும் ஸ்டம்பை பறிகொடுத்தனர். இதனால் இங்கிலாந்து 10 ஓவரில் 40 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. அதன்பின் இங்கிலாந்து அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஜாஸ் பட்லர் 10 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். மொயீன் அலியை (15) முகமது ஷமி வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸை (10) ஜடேஜா வீழ்த்தினார். ஒரு பக்கம் தாக்குப்பிடித்து விளையாடிய லிவிங்ஸ்டோன் 27 ரன் எடுத்த நிலையில் குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனால் இங்கிலாந்து 100 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து, டேவிட் வில்லே மற்றும் அடில் ராஷித் ஜோடி விளையாடியது. இதில், அடில் ராஷித் 13 ரன்களில் ஷமியின் பந்து வீச்சில் வீழ்ந்தார். 9வது விக்கெட் இழந்த நிலையில், டேவிட் வில்லேவுடன் மார்க் வுட் ஜோடி சேர்ந்தார். இதில், ஒரு ரன் கூட எடுக்காமல் மார்க் வுட்டும் அவுட்டானார். இறுதியில், 34.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து தோல்வி அடைந்தது. இந்நிலையில், 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக விளையாடி இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.