உலகக் கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 26-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 9 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 50 ரன்கள் எடுத்தபோது இவரும் அவுட் ஆனார்.

இவரைத் தொடர்ந்து வந்த முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, சௌத் ஷகீல் முறையே 31, 21 மற்றும் 52 ரன்களை குவித்தனர். ஷதாப் கான் 43 ரன்களையும், முகமது நவாஸ் 24 ரன்களை எடுத்தார். ஷாகீன் அஃப்ரிடி 2 ரன்களிலும், முகமது வாசிம் 7 ரன்களையும் எடுத்தனர். போட்டி முடிவில் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள் முடிவில் 270 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷம்சி 4 விக்கெட்டுகளையும், மார்கோ யென்சென் 3 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளையும், லுங்கி நிகிடி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இதில், குயிண்டன் டி காக் 24 ரன்களும், தெம்பா பவுமா 28 ரன்களும், ராசி வான் டி தசன் 21 ரன்களும், ஹெயின்ரிச் கிளாசென் 12 ரன்களும், டேவிட் மில்லர் 29 ரன்களும், மார்கோ ஜான்சென் 20 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

அதிகபட்சமாக அய்டன் மார்க்ராம் 91 ரன்களும், கெரால்டு காட்ஜீ 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 41.1 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா விளையாடி வந்தனர். இறுதியாக களத்தில் கேஷவ் மகாராஜ் மற்றும் லுங்கி ங்கிடி விளையாடினர். இதில், லுங்கி ங்கிடி 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, கேஷவ் மகாராஜூடன் தப்ரெய்ஸ் ஷம்ஸி விளையாடினார். மகாராஜ் 7 ரன்களும், ஷம்ஸி 4 ரன்களும் எடுத்தனர். இந்த ஆட்டத்தின் முடிவில் 47.2 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா போராடி வெற்றிப் பெற்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools