Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் – சர்வதேச தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்

ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரின் சர்வதேச தூதராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்து இருக்கிறது. இன்னும், சில தினங்களில் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஐ.சி.சி. இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆறு முறை தேசத்திற்காக களமிறங்கி, விளையாடி இருக்கும் சச்சின் டெண்டுல்கர், 2023 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஆண்கள் உலகக் கோப்பையுடன் நடந்து வரவிருக்கிறார்.

சர்வதேச தூதராக அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் சச்சின் டெண்டுல்கர், “1987-ல் பால் பாய்-ஆக இருந்து தேசத்திற்காக ஆறு முறை உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருக்கிறேன். என் மனதில் உலகக் கோப்பைகளுக்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு.” “எனது கிரிக்கெட் பயணத்தில் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது தான் மிகவும் பெருமை மிக்க தருணம். பல்வேறு விசேஷ அணிகள், தலைசிறந்த வீரர்கள் ஐ.சி.சி. ஆண்கள் உலகக் கோப்பை 2023 தொடரில் கடுமையாக போராட இருக்கின்றனர். இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று தெரிவித்து உள்ளார்.