Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் – நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக்டோபர் 21) இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

நெதர்லாந்து அணியினர் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதன்படி நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலங்கை அணியின் பந்து வீச்சை அருமையாக எதிர்கொண்ட இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். 70 ரன்கள் எடுத்த போது சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 262 ரன்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரரான நிசாங்கா 54 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய பெரரா 5 ரன்களிலும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த சதீர சமரவிக்ரம சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய அசலங்கா 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இலங்கை அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிவில் சதீர சமரவிக்ரம 91 ரன்களுடனும், துஷன் ஹேமந்த 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.